தமிழில் முதன்முதலாய்ச் சிறுகதையைச் சமைத்தவர் யாரென்று இன்றளவும் கூடத் தெரியவில்லையாம். கேள்வி கேட்கும் முன்பே ‘இதுதானா உன் கேள்வி?’ என்று கேட்டுப் பதில்களளிக்கும் என் ‘கூகுள்’ குருவே குழம்பிப் போகிறார். ‘பாரதியாரா? வ.வே.சு ஐயரா? யார் முதலில் தமிழ்ச் சிறுகதை எழுதினார்?’ என்று இக்கேள்வி கேட்ட என்னிடத்திலே கேள்வி எழுப்புகிறார். என் இதயத்தில் இது இனம்புரியா வேள்வியை எழுப்புகிறது.
எந்தவொரு கதையையும் முதலில் யார் எழுதுகிறார் என்பதை எவரும் சொல்ல முடியாது. ஏனெனில், எல்லாக் கதைகளும் காகிதங்களில் அச்சடிக்கப்படுவதற்கு முன்பே எழுத்தாளரின் கற்பனையில் பதிக்கப்படுகின்றன. எல்லா எழுத்தாளரின் முதன்முதல் பதிப்பகம் மூளையாகத் தான் இருக்கும். எந்த ஒரு கதையும் எழுத்தால் எழுதப்படுவதற்கு முன்னரே எண்ணத்தினால் எழுதப்பட்டிருக்கும். அதன் முதலெழுத்தானது எழுதி முடிக்கப்படும் முன்பே அது முற்றிலும் முடிந்திருக்கும். கதை அச்சடிக்கப்பட்ட தேதி தெரியும். அது கற்பனையில் பிறந்த நாளை நாமறியோம். எனில், எப்படி ‘இதுதான் முதல் கதை. இவர் தான் முதலில் எழுதினார்’ என்று நாம் கூற முடியும்?
இந்த ‘அவள் ஒரு மரம்’ கூட அப்படித்தான். நான் முதல் சிறுகதை எழுதுகையிலே எனது மூளையின் முக்கில் விதையைப் போல் வந்து பதிந்துவிட்டது. எனது கை முதல் கதையை முடித்த பிறகு இரண்டாம் கதை இங்ஙனம் முளைத்து விட்டது. நடப்பவை எல்லாம் நன்மைக்குத் தான். நடந்தவையும் நன்மைக்கே தான். சிற்சில நிகழ்வுகள் நடப்பதை நம்மால் தடுக்க முடியாது. கடந்த நான்கு ஆண்டுகளில், என் வாழ்வில் அடுத்தடுத்து நடந்த, பல்வேறு நிகழ்வுகளை என்னாலுமே தடுக்க முடியவில்லை. வேலை எனும் வேலைத் தேடப் போய் அவமான அரிவாள்மனைகள் என் ஈராண்டுகளின் வேரைக் கிழித்தன. என்னால் ஒட்டிட இயலவில்லை. இதழ் மூடியே இருந்தேன்; என் இரண்டு ஆண்டுகள் இறந்திருப்பதை உணர்ந்தேன். இருப்பினும், என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. மனதினில் சிந்தாச் சினத்தையும், சிறிது இரணத்தையும் ஒன்றாய்ச் சேர்த்து வைத்திருந்தேன். மீதம் இடமில்லாத என் மனது, ஒரு நாள் அவை அனைத்தையுமே எறிந்துவிடச் சொன்னது. ஏது செய்வது? எறிந்துவிட்டேன். ஓர் கதையாய் அவற்றையெல்லாம் எழுதிவிட்டேன். அதுதான் என் முதல் படைப்பு. நாம் கனவைக் கடைபிடிப்பதற்கு ஓர் கட்டாயம் தேவை போலும், ஏதோ ஒன்று சிறு கட்டளையிட வேண்டும் போலும். அப்படித்தான், ‘I have an interview tomorrow’ என்ற அந்த ஆங்கிலச் சிறுகதையை எழுதி வெளிவிட்டேன். எல்லாப் புகழும் என் தீராக் கோபத்தைத் தான் போய்ச்சேரும். அந்த ஒரு கோபந்தான் கவலைகளிருந்து எனைக் காப்பாற்றி, கனவிடம் கடத்திச் சென்றது.

கோபம் எவரையும் பாதிக்காத வரையில், அதனைக் குறித்து நாம் பயப்படத் தேவையில்லை. நானும் பயப்படவில்லை. என் கோபம் என்னோடு சேர்த்து எவரையும் பாதிக்கவில்லை. மாறாக, அது எனைச் சிறுகச் சிறுகப் பரிசுத்தப்படுத்தியது. பேனா என்கிற மிக வலிய ஆயுதத்தை சிறு கையிலேந்த என்னை ஆயத்தப்படுத்தியது. ஆத்திரத்தோடு எழுந்தேன்; ஆங்கிலக்கதை எழுதினேன். இதுவரை நான் எவருக்குமே உரைக்காததை உரைநடை செய்தேன்.
பிரசுரமாக்க வேண்டி அந்த முதல் கதையை என் கை வேகமாய்ப் பிரசவித்துக் கொண்டிருந்த வேளை அது. இன்னொரு கதைக்கரு என் மூளைக்குள் சூல் கொண்டது. ‘ஏ, மூளையே! இன்னும் முதல் கதை கூட முடியவில்லையே!’ என்று சொல்லி, கருச்சிதையக் காத்திருந்தேன். என்ன வியப்பு! மூன்று மாதங்களில் முற்றிலும் வளர்ந்து வெளிவரத் துடித்தது. ஒரு முனையில் பிரசவம், மறு முனையில் கர்ப்பம். படிப்போர் எவருமே பயப்பட வேண்டாம்! படைப்பாளிகளைத் தவிர்த்து வேறு எவருக்கும் இது போல் நடக்காது.
எனக்கு அந்த நாள் நன்றாகவே ஞாபகம் இருக்கிறது. நவம்பர் 10, 2020. அந்நாளில் தான் கருத்தடையை எதிர்பார்த்துக் காத்திருந்த என் கருக்குடை உடைந்தது. முதல் கதையை எழுதி முடித்த கையோடு என் இரண்டாம் கதையை எழுதத் துவங்கிவிட்டேன். ஒன்றரை வருடங்கள் எடுத்தது இதை முழுதாய் எழுதி முடிப்பதற்கு. ‘என்ன! ஒரு சிறுகதை எழுத இவ்வளவு காலமா?’ என்று நீங்கள் கேட்பது எனக்கிங்குக் கேட்கிறது. ஆமாம், ஒன்றரை வருடங்கள் ஆயின. நீங்கள் நினைப்பது போல இது ஐந்து பக்க சிறுகதை இல்லை. இது ஐந்தாயிரம் வார்த்தைகளை உள்ளடக்கிய ஒரு சிறுகதை. நான்காயிரம் வார்த்தைகள் இருந்தால்தான் அது நல்ல சிறுகதையாம். எனக்கொன்று புரியவில்லை. கற்பனைக்கு எல்லை இல்லை என்கையில் கதைக்கு எதற்கு வரையறை? தேவையில்லை. ஐந்தாயிரம் வார்த்தைகளைக் கொண்டது இச்சிறுகதை. ஐயோ, இதற்கே நீங்கள் ஆச்சரியப்படின் எப்படி? உங்களின் ஆச்சரியம் சற்றே அமரட்டும்! மேற்குத் தொடர்ச்சி மலையில் இருக்கும் ஒரு மரம் தான் இந்தச் சிறுகதையின் தலைமைப் பாத்திரம். என்மேல் ஆத்திரம் வந்திருக்குமே! ஆம், ஆத்திரம் வரத்தான் வேண்டும். நான் பெரும் ஆத்திரத்தோடு தானே இதை எழுதியுள்ளேன். எழுதியவர் உணர்ந்ததையே படிப்பவரும் உணர முடிந்தால் அவர் எழுத்திற்கு அதனினும் மேலான பரிசு கிடைத்துவிட முடியாது.

இந்தப் பனுவலும் கூட என் கோபத்தில் விளைந்த நெல் தான். இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நான் நினைக்கிறேன். அம்மலையில் இப்போதும் நடைபெற்றுவரும் காடழிப்பைக் குறித்துத் தான் இக்கதையின் கதாநாயகியான மரம் பேசப்போகிறது. ஆமாம், கதையில் மனிதரை மட்டுமே பேசவிட்டு என் கற்பனைக்கு முட்டுக்கட்டையிடுவதற்கு நான் தயாராக இல்லை. ஏற்கனவே சொன்னது தான். எந்தவொரு கற்பனைக்கும் வரையறையே இல்லை. என் முதல் கதையில் கூடவும் கதாநாயகியின் மனம் அவளிடம் பேசிக்கொண்டே இருக்கும். இதுவே எந்தன் வழக்கம். இருவர் சேர்ந்து ஒருநாள் பேசுவது போன்று தான் இந்நூலும் இருக்கும்.
இங்கு மரத்தோடு பேசுவது அவள் காதலனான கதிரவன். சூரியன் இருந்தால் சந்திரன் இருக்கும், இல்லையா? நிலவு இங்கு இருவருக்கும் இனிய தோழனாக உடனிருக்கிறது. இம்மூவருக்கும் இடையில் நடக்கும் உரையாடல் தான் இப்புத்தகம். வாசிப்பதற்கு கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும். ஏனெனில், தமிழில் இது முதல் முயற்சி. ஆமாம், ஆங்கிலத்தில் இப்படி எழுத ஆரம்பித்ததும் நான்தான். ஒரு நூலின் நடுவே உரையாடல்கள் இருக்கலாம். இங்கு முழு நூலே உரையாடலாய் இருக்கின்றது. இதுவரை சர்க்கரை கலந்த தேநீரை அருந்திய உங்களைத் தேனைப் பருகச் சொல்கிறேன். ‘இத்தேன் தெவிட்டாது’ என்று என்னால் தெரிவிக்க முடியாது. இச்சிறுகதையை நீங்கள் சிறுகச் சிறுகத் தான் பருக வேண்டும். எச்சரிக்கிறேன்! இது எச்சிலே படாத தேன்! இவ்வமிழ்தம் மிக இனிக்கும்; அவ்வப்போது கண்ணீரையும் வரவழைக்கும். இக்கதையை முதலில் வாசித்தவள் என்ற முறையில் நான் எச்சரித்து விட்டேன். உங்கள் விழியின் துளிகள் விழுந்து துடித்தால் என்னைக் கைநீட்டக் கூடாது!
எனது முதல் சிறுகதையை மூன்றே மாதங்களில் எழுதி முடித்துவிட்டேன். இக்கதையை எழுவதற்காக சுமார் ஒன்றரை வருடங்கள் ஓயாதுழைத்தேன். மேற்குத் தொடர்ச்சி மலையில் காடுகள் அழிக்கப்படுவதைக் குறித்து நான் செய்த ஆய்வே என் அரையாண்டைத் தின்றது. இரு மாதங்களுக்குள் இந்தக் கதையை எழுதிவிடலாமென எண்ணினேன். இயலவில்லை. எழுதத் தொடங்கிய நாள் முதல் இமைகளும் என் சொல்லுக்கு இசையவில்லை. பெற்றோர் எனக்கிட்ட பெயரை மறந்து ‘அவள் ஒரு மரம்’ என்று ஒரு பெயரை அவசரமாய் எனக்கு நானே சூட்டிக்கொண்டேன். ‘எழுந்து சென்றால் என்னால் எழுத முடியாமல் போகுமோ’ என்றெண்ணி, கட்டிலிலேயே எனைத் தைத்துக்கொண்டேன். அரைப்பத்தி எழுதி முடித்து அணையாடை மாற்றலாம் என்று உள்ளாடை நனையும் வரை உட்கார்ந்திருந்தேன். இடையிடையே என் வயிறு பசித்திடும் போது எழுதிய எழுத்துகளையே கண்களால் தின்றேன். இந்நூலை எழுதி முடிப்பதற்கு முன்பே நான் இறந்துவிடக்கூடும் என்று எனக்கு வாய்க்கும் உணவை என் வாய்க்கும் கொடுத்தேன். ‘என்னால் எழுதமுடியுமெனத் தவறாக எண்ணினேனோ’ என்று நினைத்து, தனியாய்த் துடித்தேன். கடைசியில், ஒரு நாள் இக்கதையை எழுதி முடித்தேன். கண்ணி வெடியில் கால்வைத்துப் பிழைத்ததைப் போல் சிரித்தேன். எழுதியதை வாசிக்கையில் இதுநாள்வரை என் வாழ்க்கையில் இழந்ததை எல்லாம் திரும்பப் பெற்றதைப் போல் பூரித்தேன்.
மேற்குத் தொடர்ச்சி மலையில் காடுகள் அழிவது நிறுத்தப்பட வேண்டும் என்ற ஒரு சீரிய நோக்கத்தோடு எழுதப்பட்ட புத்தகம் இது. மனிதருக்காகச் சட்டங்கள் இருப்பதைப் போல் இம்மலைக்காகவும் சட்டங்கள் வேண்டும் என்று கோருகிறது. எழுதிய என்னையே தாக்கிய இப்புத்தகம், வாசிப்போரின் உள்ளத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தாமலா செல்லும்? நிச்சியமாக, இது எல்லோர் மனதிலிருக்கும் காடழிக்கும் எண்ணத்தைக் கொல்லும்.
வேறேதும் இல்லை. இதுதான் கதை. மேற்குத் தொடர்ச்சி மலைவாழ் மரமொருத்தி மேலிருக்கும் கதிரவனைக் காதலிக்கிறாள். அவள் வாழும் காட்டில் மனிதர்கள் ஒரு இரயில் பாதை அமைக்க உள்ளனர். தான் விரைவில் இறக்கவிருப்பதை அறிந்த அவள், அங்கு நடப்பவை அனைத்தையும் ஒருநாள் தனது காதலனிடம் சொல்ல முடிவெடுக்கிறாள். அந்நாளில் இவ்விருவரும், இரவில் வரும் நிலவும் என்னவெல்லாம் பேசுகின்றனர் என்பதுதான் கதை.

‘காடழிப்பு’ என்ற வார்த்தையே இங்குப் பலருக்கும் கசக்கிறது. அதனால், காதலைச் சேர்த்து இக்கதையை இன்னுங்கொஞ்சம் இனிப்பாக்கியுள்ளேன் நான். கடித்துத் தின்ன கடினமாய் இருக்கும் சொற்களுக்காகக் கடைசியில் அருஞ்சொற்களின் தொகுப்பைச் சேர்த்துள்ளேன். இது என் முதல் தமிழ்ப் புத்தகம் என்பதால் இத்தள்ளுபடியை உங்களுக்கு அளித்துள்ளேன். இனிவரும் என் கதைகளில் இதனை எதிர்பாராதீர்கள்! இப்புத்தகத்தை உருவாக்க உறுதுணையாக இருந்த எண்ணிலடங்கா இணையப் பக்கங்களுக்கும், என்னினிய இதயங்களுக்கும் நன்றிகள் நவில்கிறேன். சிறுகதைக்கு அறிமுகமாய் ஒரு சிறுகதை எழுதியவள் விடைபெற்றுக் கொள்கிறேன்.
எல்லோருக்கும் விடியட்டும்!
