நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி ஜுலை 11 அன்று இதுவரை நாம் எவரும் கண்டிராத, பேரண்டம் தோன்றி வெறும் 600 மில்லியன் ஆண்டுகள் ஆன போது இருந்த உடுத்திரளின் ஆழமான, தெளிவான மற்றும் துல்லியமான அகச்சிவப்புப் படத்தை வெளியிட்டது. இப்பிரம்மாண்டமானப் புகைப்படத்தில் இருந்தது ஆயிரக்கணக்கான விண்மீன் பேரடைகள் கொண்ட ஆரம்பகால அண்டத்தின் ஒரு பகுதியாகும். இப்புகைப்படம் எனக்கு மிக ஆச்சரியத்தைத் தந்ததோடு மட்டுமில்லாமல், அறிவியல் மீது நான் கொண்ட நம்பிக்கையை அதிகரித்தது. இதனைப் பற்றி சிறிது ஆராய்கையில், நான் நட்சத்திரங்களில் வாழ்விருக்க வாய்ப்பிருக்கிறது என்று நன்கு அறிந்து கொண்டேன். அதனால், ஒரு விண்மீனில் என் காதலன் இருப்பதாய் பாவித்து இக்கவிதையை எழுதியிருக்கிறேன். மேலும், இத்தாமதத்திற்கு மிக வருந்துகிறேன். இனிவரும் நாட்களில் நான் தொடர்ந்து எழுதுவேன். ஏனெனில், எதுவும் எழுதாத இச்சில நாட்களில் நான் இறந்துவிட்டதைப் போலுணர்ந்துவிட்டேன்.
எங்குள்ளாய் நீ, என் கள்வா?
இங்கு எங்குதான் உள்ளவா?
ஆங்காங்கு உனைத் தேடியே
ஆண்டாண்டு பனையாய் வாடினேன்
யாங்கிங்கு எனையே பாடுவேன்?
அலைந்தலைந்தே தொலைந்தது என் இருபத்தைந்து
அவையனைத்தையும் விடு, தோழனே! நீ இருப்பதெங்கு?
நிலத்தினில் நீ இருந்திருந்தால்
நினைக்கையில் வந்து இணைந்திருப்பாய்
இல்லை! நீ நிலத்தில் இல்லை!
ஒருவேளை அந்நிலவில் இருக்கிறாயோ?
வாய்ப்பில்லையே அங்கு நீ உலாவிட
வாய் பிளந்து அதனை யாவரும் துழாவிட
சூரியனைச் சுற்றித்திரியும் எக்கோளில்
வீரியமாய்ச் சுற்றித்திரிகிறாய் இந்நாளில்?
இல்லையெனில், அங்குமே இல்லையா நீ?
சரி, சொல் இக்கணம்! உனை எங்குக் காணலாம்?
உனது விலாசத்தோடு சிறிது அவகாசம் கொடு!
சிறியதொரு விண்கலத்தில் சீறியுனது விண்மீன் வருவேன்
நரன் இலையெனினும் உனை நன்மணம் புரிவேன்
அயலானே! அஞ்சுதல் ஏன்?
அன்னியம் அன்பிற்கு ஏன்?
பாகுபாடு எல்லாம் மறந்து
காதலோடு செல்வோம் பறந்து
பெயரில் கூட எத்தனை பேதம்!
துயரை நான் சுமந்தது போதும்!
உயரத்திற்கும் உயரே தூக்கிச் சென்றிடு
உன் ‘நட்சத்திர’ விடுதியில் உறங்கச் செய்திடு
மனிதன் தான் நான்; மறுக்கவில்லை
மனிதரல்லாத உனை அதனால் தான் வெறுக்கவில்லை
நீயிருக்க நீரெதற்கு? – உன்
நிழலிருக்க நிலவெதற்கு?
எனை ஈர்க்கும் இரு விழி இருக்க
இங்கிருக்கும் ஈர்ப்புவிசை எதற்கு?
உள்ளத்தில் காதலிருக்க – உன்
உலகத்தில் காற்றெதற்கு?
நாள்மீனில் நான் வாழ ஏதேனும் ஒரு
சாத்தியக்கூறு இருந்தால் பார்த்துக் கூறு
மீன் தன்னை மாற்றுகையில்
நான் தகவமைப்பதற்கென்ன?
என்னைக் கேட்டால், அன்பே!
அன்பில்லாதது அறிவியல் என்பேன்
அன்பில்லா அது அறிவதேது அன்பை?
இவ்விடத்தில் மனிதர் வசிப்பர் என்றது
எவ்விடத்தில் மனம் வசிக்கும் என்றதா?
இதுநாள்வரை இவ்வியலால் இயலவில்லையே!
அதனால் தான் எனை அழைத்துச் செல்ல உனை அழைக்கிறேன்
ஒரு தரம் வருவாயா? – உன்
இரு கரம் தருவாயா?
ஒரு நிமிடம் இரு, ஐயா! – உனக்கு
இரு கரங்கள் இருக்குமா?
எதற்கிந்த விதண்டாவாதம்?
எனக்கென்று நீ வந்தால் போதும்
எதையும் உன்னிடம் எதிர்பாரேன்
காதலில் விழுந்தவர் ஆயிரம் இருக்கலாம்
காதலில் எழுந்தவர் நாமாக இருக்கட்டும்
இவ்வாய்ப்பு எவர்க்கிங்குக் கிட்டும்?
சிறிய நான் விண்ணில் பறக்க வேண்டும்
சிறிது நாள் மண்ணை மறக்க வேண்டும்
என் சிரிப்பின் எச்சில் துளிகள்
மண் பட்டு மழையாக வேண்டும்
ஆனால், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை
அங்கீகரிப்பாயா எனக்கொரு விடுமுறை?
உன்னுடன் இருக்கினும் – நான்
உலகினை மறக்கலாகுமா?
விண்ணைத் துளைக்கினும் – மரம்
வேரினைத் துறக்கலாகுமா?
எதற்காக என்று கேட்காதே!
பிரிந்தாலும் உலகமென் பிறந்த வீடல்லவா?
இறந்தாலும் இந்தியாவின் பிரஜை தானல்லவா?
அக்கரை போயினும் அக்கறை போகுமோ?
ஆட்சியில் யாரிருக்கிறார்?
மனிதரில் காதலிருக்கிறதா?
மண்ணில் காடழிக்கப்படுகிறதா?
எல்லாம் நான் காண வேண்டாமா?
திகைத்திடாதே, திருவே!
திரும்பி நான் வருவேன்!
என்னைத் தவிர்த்து இவ்வுலகிற்கு எத்தனையோ பேர்!
உன்னையும் உலகினையும் தவிர எனக்கென்று எவர்?
வானமிருக்கும் மட்டும் நம் வாழ்விருக்கட்டும்!
உலகிற்குத் தானே ஆண்டுகள் அன்றி
உனக்கில்லையே! அதற்காக நன்றி!
பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகும்
புள்ளிகளாய் நமைக் கண்டுலகம் பிரமிக்கும்
அகச்சிவப்புப் படங்களெடுக்கும் தொலைநோக்கி – என்
முகச்சிவப்பினைப் படங்களாக்கும் தெளிவாக்கி
இவையெலாம் உண்மையில் நடக்குமல்லவா?
இவள் கால்கள் உலகினைக் கடக்குமல்லவா?
மணல் துகள் காணும் போதெல்லாம்
மனதுக்குள் நாணுகிறேன் நாளெல்லாம்
சொல், யாங்குனை நானும் காணலாம்?