எப்பொழுதும் போதில்லை இன்றைய நிலை. ஏழு மணிக்குத் தான் விடிந்தது என்னினிய காலை. என்னவென்று நீங்கள் என்னிடம் கேட்காதீர்கள்! ஐயகோ, என் விடுதியறையின் கொசுக்களை எண்ணி விடவும் பார்க்காதீர்கள்! நான் இனி கொசுக்களை ‘uncountable nouns’ க்கு எடுத்துக் காட்டாக என் மாணவர்களுக்குப் பயிற்றுவித்தாலும் ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால், அளப்பரியது தான் அவைகளின் சேவை! ஆமாம், எவரிதழும் தூங்க விடாது எனை இவ்வளவு முத்தமிடாது; என் விடுதிக் கொசுக்களை விடுத்து எதுவும் சத்தமிடாது எனது திசுக்களை இப்படிக் கத்தவிடாது!
என்னாடைக்குள்ளே இவைகள் நுழைகின்றனவே! பொன்னாடை போர்த்த விழைகின்றேன்-இந்தக் கொசுக்களுக்கு அன்று. இவரை என்னறையில் ஏவிவிட இரு நாள் குப்பைகளைக் கீழே தூவிவிட்ட வள்ளலாம் அந்த வெள்ளைத் தொப்பைக்காரத் தொட்டியை.
“ஏய் தொட்டியே! எதையும் தரையில் கொட்டாதே! எழுந்தேனானால் தலையிலேயே கொட்டிடுவேன்! எனது போதாத காலம் தான்! இருந்தும், என்னிரு கால் படியேறிட என்ன இரு நொடி போதாதா? பணம் தின்னும் கழுகான எம் காப்பாளர் உன் துர்மணம் உணர்ந்து என்றாவது வந்துனைப் பார்ப்பார். அதுவரை, என் தொட்டியே, அகற்றாதே உன் குட்டிக் குப்பைக் குழந்தைகளின் தொப்புள் கொடிகளை! சொல், அனுதினமும் நீயா வாங்குகிறாய் கொசுக்களின் அன்புக்கடிகளை?”
நான் எழுந்ததைக் குறித்து இங்கு இனி ஒன்றும் எழுவதற்கில்லை. ஏழு மணிக்கு எழுந்தவள் எல்லா வேலைகளையும் முடிக்க ஒன்பது மணி ஆனது. இடையே பசியோ எனதுயிரை ருசித்துப் போனது. நானோ பாத்திரத்தைத் திறந்து பார்த்த மாத்திரத்தில் பயந்தே போனேன். ஆசையாய் நானும் பார்த்தால் அங்கிருந்ததெல்லாம் பாஸ்தா! இதற்காக இத்தாலியை என்னால் குறைகூறிட இயலாது.
அவர்கள் பாஸ்தாவைச் செய்யும் முறையைக் கண்டறிந்தார்கள். இப்படியொரு உணவுள்ளதை இங்குதான் முதன்முதலில் நான் உண்டறிந்தேன். ஐயோ, இந்நாள் இதுதான் எனக்கு நேர்ந்த பெரும் இன்னல். இனிமேல் ‘பாஸ்தா’ என்று சொன்னால் எங்களின் மகளிர் விடுதியில் சாப்பிடத் தரப்படும் ஒருவித உப்பிட்ட, அவிந்த கோதுமை மாவே வந்துபோகும் எந்தன் நினைவின் முன்னால். இதனை இத்தாலியர் தின்றால் தங்கள் கண்டுபிடிப்பை எண்ணி மெத்த வருந்துவர்.
‘இத்தனை சொல்கிறாயே! எத்தனை நாள் இதனைத் தின்றாய்?’ என்று கேளாதீர்கள். அது ஒரு அழகான ஞாயிறு. மிகவும் பசித்தது எனது வயிறு. பாத்திரத்தைப் போய் திறந்து பார்த்தேன். அதற்குள் சுருள் சுருளாக ஏதோ ஒரு உணவு தென்பட்டது. எனது தட்டில் ஏராளமாய் எடுத்துத் தட்டினேன். ஆசை அவசரப்படச் செய்யும் தானே? ஆறும் முன்னே அதை அள்ளி விழுங்கலானேன். ‘இதுவரை அறுசுவையையும் உண்டிருக்கிறேன். இதென்ன சுவையே அன்றி ஒரு சுவையைக் கொண்டிருக்கிறதே! எந்நாவிற்கு இன்று என்னானது?’ என்று எண்ணியவாறு இரண்டாம் முறை சிறிதெடுத்து நாவினைத் தொட்டேன். நான் நினைப்பது போலன்றி நடப்பது உண்மை தான். இப்படியும் ஒரு சுவை இருந்திருக்கிறது. என்ன, அது இன்றே எனது நாக்கிற்குத் தெரிந்திருக்கிறது. அவ்வளவு தான். “இது என்னது?” என்று கேட்க, அறையிலிருந்த தோழி “இதுவா? இதுதான் பாஸ்தா” என்றாள். ‘பாஸ்தா’ என்பதைப் பாட்ஷா போல் சொன்னாளவள். பயந்தே போனேன்! உணவை வீணடிக்கக் கூடாது என்பதற்காக உயிரை வீணடிக்கவா முடியும்? தொலைவில் போயதை எறிந்து விட்டேன். தீண்டாமை ஒரு பாவச் செயலே. என் விடுதியின் இந்த உணவிற்கு மட்டும் அன்று முதல் விதிவிலக்கு. வேண்டும் போதும் கூட அதனைத் தீண்டயதில்லை. இன்று மட்டுமதை உண்பேனா? இல்லை. எதுவும் உண்ணாது என் அலுவலகத்திற்குச் சென்று விட்டேன். ஆனால், அலுவலகக் கதவின் சாவி என்னிடமில்லை. சக பணியாளரை அழைத்தேன். சாவி தன்னிடம் உள்ளதென்றார். அவர் வரும்வரை நான் சிறிது காத்திருந்தாக வேண்டும். ‘நான் காத்திருக்க வேண்டுமா?’ என்றது என் வயிறு. ‘நீ மிகவும் மோசம்! கொஞ்சம் பொறு!’ என்றவாறு சமோசா வாங்கிவரச் சென்றேன். ‘சாப்பிட சமோசா போதுமானதா?’ எனக் கேட்காதீர்கள்! இந்திய ஏழைகளுக்கு இதயம் சிறிது சிறியது போலும். பசி உயிரை எரித்தாலும் சிறிதே தின்ன எதிர்பார்க்கும்; விலை குறைந்த விஷயங்களையே விரும்பி எதிர்நோக்கும். இந்திய ஏழை நான். என் வங்கிக் கணக்கில் அப்போது 161 ரூபாய் இருந்தது. மாதம் முடிய இன்னும் நிறைய நாட்கள் இருக்கிறது. ‘நானொரு இந்திய ஏழை. ஆமாம், இரண்டு சமோசா என்ன விலை?’ என்று யோசித்துக் கொண்டு நடந்தேன். ‘அட, இருபது ரூபாய் பிரியாணிக் கடை இன்று காலையிலே திறந்துள்ளது!’ என் இதயம் தனை மறந்து துள்ளியது. ‘கடை இருக்கிறது. என் கடவுள் இருக்கிறாரா?’ கண்ணிரண்டும் கடையில் தேடியது. உட்செல்ல அக்கடையில் ஒன்றுமல்ல. ஒரு சிறிய இடமது. அறை என்றதை நான் எப்படிச் சொல்ல? இயலாது. ‘எங்கிருக்கிறார் எங்கள் கடவுள்? இதோ எங்காயம் உதிர்ப்பவர் வெங்காயம் உரிக்கிறார்!’ இதயம் விவரித்தது. அவரின் பெயரேது? அதெனக்குத் தெரியாது.
“அண்ணா!” என்றேன் நான்.
“காலையில் கூட பிரியாணி கிடைக்குமா?”
“ஆம், கிடைக்கும்” என்றார்.
“நான் தான் நேற்று உங்களை அலைபேசியில் அழைத்தேன்.”
“அது மா, நேற்று என் தாயாரின் இறந்த நாள்” என்றார். அவரது பேச்சில் ஒருவித வருத்தத்தை உணர்ந்தேன்.
“பரவாயில்லை” என்றேன். என் ஒரு வார்த்தை தீர்த்திருக்குமா அவரது வருத்தத்தை?
“எத்தனை ரூபாய்க்கு, மா?”
“முப்பது ரூபாய்க்கு மட்டும். கூட ஒரு முட்டை இருக்கட்டும்.”
பிரியாணியைக் காகிதத்தில் கட்டி ஒரு பையில் போட்டுக் கொடுத்தார். அதை வாங்கிக் கொண்டேன். 161 ரூபாயில் இருந்து 40 ரூபாய் குறைந்தது என் வங்கிக் கணக்கில்.
‘பரவாயில்லை; குறைவான விலை’ இதயம் சொன்னது.
என்னறைக்குச் சென்றேன். எடுத்ததனைத் தின்றேன். மூடியிருந்த வேளை சோயா சோற்றின் அளவு கூடியிருந்ததை நான் அறியவில்லை. இருந்த போதும், இப்போது கண்ணால் அளந்தேன் அதை. அட, கடவுள் அறியாததா? என் கடும்பசி அவருக்கென்ன புரியாததா?
சோயா அவரை பிரியாணி தான் என்றாலும் ஓயா உழைப்பினில் வந்தது. அவர் ஒருவரின் பாட்டின் சூட்டில் வெந்தது. “ப்ரோ, 20 மூணு, 40 ஒன்னு பார்சல்”, “30 இரண்டுங்க. அதுல முட்டையும் போட்ருங்க”, “தம்பி, 30 ஒன்னு சாப்பிட”, “அண்ணா, ஏழு 20 தாங்க” இப்படிக் கூவும் கூட்டத்தில் எப்படித்தான் யார்யாருக்கு எது எத்தனை என்று கணிக்கிறாரோ தெரியவில்லை. ஒவ்வொருவரும் கொடுக்க வேண்டிய காசினை எவ்வாறு கணக்கிடுகிறாரோ புரியவில்லை. ஒரே நேரத்தில் ஐந்தாறுக்கும் மேற்பட்ட மினுமினுக் காகிதங்களை எடுத்து பிரியாணி இருக்கும் பாத்திரத்தின் மூடியின் மேல் வைப்பார். படபடவென அவை மேல் சோற்றினை வைப்பார். பின் ஒவ்வொன்றிலும் ஓரிரு துளி ஊறுகாய் மற்றும் சிறிதே நறுக்கிய வெங்காயத் துண்டுகளை வைப்பார். முட்டை கேட்டோருக்கு மட்டும் ஒரு அவித்த முட்டையை எடுத்து அணைத்து வைத்த பின் அனைத்துக் காகிதங்களையும் ஆங்கில ‘தி இந்து’ நாளிதழில் இட்டு ஆங்காங்கே மடித்து அழகாகக் கட்டுவார். பின்னர் அதைப் பையிலிட்டு எவருக்கு அதைக் கொடுக்க வேண்டுமோ அவருக்குக் கொடுத்த பின்னமே அவர்களிடமிருந்து அதற்கானப் பணம் பெறுவார். பணியிலும் பணிவிலும் சாளச் சிறந்தவர். அவர் தடுமாறியதை ஒரு தரம் கூட நான் கண்டதில்லை. அவர் குணத்தால் நிறம் மாறியதாக ஒருபோதும் எனது உள்ளம் உணர்ந்ததில்லை. பசி ருசி அறியாதாம். சொன்னவரை இங்கு வரச் சொல்லுங்கள்! அவர்கள் பசி போக ருசியான உணவளிப்பார். எங்கள் இறை செய்யும் சேவை குறைந்த விலை, ஆனால் அதன் சுவை குறைந்ததில்லை. அடைத்த ஒரு கட்டடத்தில் ஆங்கிலம் கற்பிக்கும் எனக்குள் ‘உண்மையாக நாம் உழைத்தால் ஊதியம் உண்டு’ என்பதை உணர்த்தியவர்.
இறைவனைத் தேடி எங்கெங்கோ ஏன் அலைய வேண்டும்? இல்லம் விட்டு இரண்டு எட்டு தள்ளிப் போங்கள்! எவரறிவர்? என்னைப் போலவே இருபத்தாறாவது வயதில் ஏதாவதொரு சின்னக் கடையில் நீங்களும் கடவுளைக் காணலாம். ஆம், உழைப்பவர் எல்லாம் உயிரோடிருக்கும் ஒரு கடவுள் தான்.
Note: This piece was originally written on Feb 12 but published only on Feb 13.