“ரவி! நீ இங்கேயே இருப்பியா? நான் இன்டர்வியூ முடிஞ்சதும் வந்துடுறேன், சரியா?” என்று தன் வழிகாட்டி நாயிடம் சொல்லிவிட்டு நேர்காணல் நடைபெறும் அறையினுள் நம்பிக்கையோடு நுழைகிறார் நாற்பது வயதான நந்தகுமார்.
“ஸர், மே ஐ ஹெல்ப் யு?” என்று ஓடிவந்து ஒரு பெண் அவரிடம் கேட்கிறாள்.
“நோ, தங்க்ஸ், மேடம்! ஐ கேன் மேனஜ்,” என்று அவர் தனக்கே உரிய ஒரு புன்முறுவலோடு பதிலளிக்கிறார்.
“ச்சே! எவ்வளவு நல்ல மனுசன்! இவருக்குப் போய் இப்படிக் கண் தெரியாமப் போயிருக்கே!” என்று அங்கிருந்த ஒரு பெண் வரவேற்பாளர் தனக்குத் தானே வருந்திக் கொள்கிறாள்.
நந்தகுமார் மெல்ல நடந்து உள்ளே செல்கிறார்.
“குட் மார்னிங், மிஸ்டர் நந்தகுமார்! ஹௌ டு யு டு?” என்ற வார்த்தைகளால் மேலாளர் அவரை வரவேற்கிறார்.
இவர் தனது பார்வையை இழந்து இரண்டு வருடங்கள் ஆகின்றன. ‘தன் கணவருக்கு இப்படி ஆனதே!’ என்றெண்ணி இவர் மனைவி இறந்தே போய்விட்டார். மகள் இவர் தான் தன் தகப்பன் என்பதை மறந்தே போய்விட்டாள். ‘உங்களைப் போல வேறு ஒருவரில்லை!’ என்று பாராட்டியோர் யாவரும் இவர் பார்வை இழந்தவுடன் ‘பதவியில் இருந்து போ’ என்றுவிட்டனர். இழப்புகளால் இரண்டு வருடங்கள் இறந்தது போலிருந்த இவரை இப்படி உயிர்ப்பித்ததெல்லாம் இவருக்கு உயிர் கொடுத்த தாய் தாம். அதன்பின் இருபது இடங்களில் நேர்காணல் கொடுத்தார். வேலை கேட்டு போனவர்க்குப் பெரும் அவமானமும் வெறும் அனுதாபமும் தான் அன்பளிப்பாகக் கிடைத்ததே தவிர, இதுபோல் அளவுகடந்த அன்பையும் மதிப்பையும் அவர் மேல் எவரும் அள்ளி எறிந்ததில்லை.
மேலாளரின் குரலை வைத்து அவருக்கு சுமார் இருபத்தைந்து வயதிருக்கும் என்று குமார் கனித்துக் கொள்கிறார். பின் அவர் கேட்ட கேள்விக்கு மிகப் பணிவாகப் பதில் சொல்கிறார்.
“ஃபைன், தங்க் யு. அன்ட் யு, ஸர்?”
“யா, ஐம் டூயிங் பிரிட்டி குட். நந்தகுமார், பிலிஸ், ஹவ் ய ஸீட்.”
“தங்க் யு, ஸர்! ஹியர் இஸ் மை ரெஸ்யூமே!”
“யஸ், குமார்,” என்றவர் அவரிடம் சில கேள்விகள் கேட்கிறார். அதற்கு குமார் கூறிய பதில்களை அமைதியாகக் கேட்டுவிட்டு, “குமார், யுவர் அன்ஸர்ஸ் ஆர் எக்ஸலன்ட்! அன்ட் ஐம் ஹப்பி டு அப்பாயின்ட் யு அஸ் ய ஹெச்.ஆர் ஹியர்!” என்கிறார்.
அவர் சிலாகித்ததைக் கேட்ட நந்தகுமார் தன் நரம்புகள் யாவும் சிலிர்த்து, மேலாளருக்கு மறுபடியும் நன்றி சொல்கிறார்.
“டோன்ட் மென்சன் இட். பை த வே, கன் யு ரிமம்பர் மீ, குமார்?”
“நோ, ஐ கான்ட், ஸர்.”
“டு யு ரிமம்பர் ஃபஸ்ட் ஸோர்ஸ்?”
“யஸ், தட் இஸ் வர் ஐ வொர்க்ட் அஸ் ய ஹெச்.ஆர் ய ஃபியு இயர்ஸ் அகோ. வொய் டு யூ ஆஸ்க் திஸ் நௌ, ஸர்?”
“இல்ல, நான் அங்கதான்…”
“அங்கதான் நீங்களும் வேல பாத்தீங்களா?”
“நோ, மூணு வருஷத்துக்கு முன்னாடி ஒருநாள் நான் ஒரு இன்டர்வியூ அட்டன்ட் பண்ண அங்க வந்தேன்.”
“ஓ!”
“ஆமாம், நீங்க அப்போம் என்னப் பாத்து, ‘நீயெல்லாம் எதுக்கு இன்டர்வியூக்கு வர்ர? எத்தன இரயில் இங்க ஓடுது! போ, போய் கடல மிட்டாய் வித்தா ஒரு நாளைக்கு நூறு ரூபா கிடைக்கப் போகுது!’ அப்படின்னு சொன்னீங்க.”
“அது நானா இருக்காது, ஸர். நல்லா யோசிச்சுப் பாருங்க. அது நிச்சயமா நானா இருக்காது.”
“இல்ல, அது நீங்க தான், நந்தகுமார். எனக்கு உங்க குரல் நல்லா ஞாபகம் இருக்கு.”
“குரலா? வாட் டூ யூ மீன்?”
“ஐ மீன், ஐ வாஸ் பான் பிலைன்ட்.”
நந்தகுமாருக்கு இப்போது தான் அன்று நடந்தவை அனைத்தும் ஞாபகம் வருகிறது.
“ஐம்… ஐம் ஸோ ஸாரி!” அவர் நடுங்கியபடி சொல்கிறார்.
“நாட் டு வொரி, நந்தகுமார், இந்தாங்க! கடலமிட்டாய் எடுத்துக்கோங்க!”
குறிப்பு:
ஆங்கிலத்தைத் தமிழில் எழுதுவதால் தான் ‘Sir’, ‘Interview’ போன்ற வார்த்தைகளை இங்கு ‘ஸர்’, ‘இன்டர்வியூ’ என்றெல்லாம் எழுதியிருக்கிறேன். ஆனால், அந்த வார்த்தைகளில் உள்ள ‘r’ என்பதை நாம் உச்சரிக்கக் கூடாது. மாறாக, ‘Interview’ என்பதை ‘இன்டவியூ’ என்றும் ‘Sir’ என்பதை ‘ஸ’ என்றுதான் உச்சரிக்க வேண்டும்.