என் இரண்டாவது புத்தகம் வெளியான காலந்தொட்டு எனக்கு எதையுமே எழுத இயலவில்லை. நானிருந்த இடத்தில் இருந்து எழுந்து, சிறிது நடக்க முயன்றேன். அதுவும் முடியாமல் மீண்டும் எனது இருக்கையதனோடே முயங்கினேன். உள்ளத்தில் உள்ள உலமரல்கள் யாவும் பனிமலைகள் போல் உருகி, உறுப்புகள் எங்கும் பெருகி இருந்தன. கடல்நீர் மட்டம் உயர்தல் போல எந்தன் உடல்நீர் மட்டம் உயர்ந்ததோ தெரியவில்லை. காரணம் ஏதும் இல்லாத போதும் கண்ணீர் வழிந்தோடியது. கதிரவனைக் கடித்து விழுங்கியது போல் என் மலருடல் உலர்ந்து வாடியது.
இப்போது இதை எழுதும் வலக்கை சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னம் இப்படியாக இயங்கவில்லை. ஏப்ரல் மாதத்து மாசங்கம் இன்னும் இறங்கவில்லை. என் நிலை உணர்ந்தும் கூட அவ்வெண்ணிலவு எனக்காக இரங்கவில்லை. நான் ரசித்த நல் நிலவு தன் நட்சத்திரப் படையோடு வந்து, என்னை உடையோடு ஓர் மெது வடை போன்று தினம்தினம் பிய்த்துத் தின்றிடும் என்று நான் நொடிப் பொழுதும் நினைத்ததில்லை.
ஐயோ, என்ன தான் ஆனேன் நான்? எழுதிய கதையில் ஒரு கதாபாத்திரம் இறந்தது என்னவோ உண்மை தான். அதற்காக அதை எழுதியவள் இப்படியா இடருற வேண்டும்? எனக்கு ஏற்பட்ட இவ்வுணர்வு எல்லா எழுத்தாளர்களுக்கும் ஏற்பட்டிருக்கக் கூடும். எழுதிய கதாபாத்திரம் காலம்செல்ல ஈன்றவரை இழந்தது போல் தான் இருந்திருக்கும். என்ன செய்வது? எழுதியது யாவும் எழுதியது. கடலலை கடந்து போனதே என்று கலங்கரை விளக்கம் கலங்கி, விழி சிந்தினால் கடலினுள் இருப்பவருக்கு எவர் ஒளி சிந்துவார்? இதோ! நான் எழுந்து விட்டேன். இன்று ஒரு கட்டுரையை எழுதிவிட்டேன்; இனி நிறையவே எழுதுவேன். தொடர்ந்து இனைந்திருங்கள்!

முயங்கினேன் – கூடினேன், உலமரல் – துன்பம், மாசங்கம் – மாதவிடாய், காலம்செல்ல – இறந்து போக