ஐவிரலோடு ஆனந்தமாய் வாழ்ந்த இவள், ஆறு வயதோடு அவை அனைத்தும் இழக்கிறாள். ஆமாம், அப்போது தான் இந்தக் கைக் குழந்தை மாக்கல்லை மணம் செய்து கொள்கிறாள். பலப்பம் இவள் பக்கம் நின்றும், பல தினம் அவனுடன் பள்ளி சென்றும் பயம் போகவில்லை இந்தப் பாவைக்கு. இருவரும் இணைந்து எழுதிய பிள்ளைகள் யாவரும் பிழையாக, இரு வருடம் ஆன பின்னும் அவரில் பலரும் பிழைக்காமல் போக, மணம் முடித்த மாக்கல்லோ மனம் உடைந்து மறுவருடமே மரணிக்கிறான். தன் இடையிலேயே இருந்த இல்லானை இடையிலேயே இழந்த இந்தக் கைப்பெண் இப்போது கைம்பெண் ஆகிறாள்.
விதவை ஆனாலும் இவளை விடவில்லை யாரும். பென்சில் வந்து பெண் கேட்க, பேதையிவள் அவன் கண் பார்க்க, மனமில்லை எனினும் மங்கை மறுமணம் செய்து கொள்கிறாள். கற்பலகை வீடு கடந்து, கணவனுடன் காகித வீட்டில் குடிபுகுகிறாள். ஆனால், முதல் கணவன் போன்று இல்லை இவன். கல்லாய் இருந்த போதும் அவன் கண்ணியமானவன். மழுங்கிய போதும் இவன் வஞ்சகன். ஆமாம், இந்த கிராபைட் கிறுக்கன் ‘அழிப்பான்’ என்பவளைக் காதலிக்கிறான். அந்த இரப்பர் ராட்சசி பொறுமையாய் இவள் பெற்ற எழுத்துகளில் பாதியைப் பொறாமையால் அழிக்கிறாள்.
எனினும் தன் தன்னம்பிக்கையைத் தளர விடவில்லை இவளும். ‘காதலி அழித்தாலென்ன, கணவன் கிழித்தாலென்ன?’ என்று பலநூறு எழுத்துக்களைப் பெறுகிறாள் அனுதினமும்.
வருடங்கள் ஆகின்றன; வகுப்புகள் போகின்றன. ஒரு நாள் மை கொண்ட மைத்துனனைக் கண்ட தையல், அவன் மேல் மையல் கொள்கிறாள். தன் தேயாத வீரத்தாலும் காயாத ஈரத்தாலும் இவளை அவன் வெல்கிறான். குறிப்பேட்டில் இவர்கள் குடியேறி எழுதிய குழந்தைகள் பல கோடி.
பிள்ளைகளுடன் சேர்ந்து பல நாள் பிரச்சனைகளும் பிறந்தாலும், இவள் பிரசவத்திற்கு மட்டும் ஒரு நாள் கூட விடுப்பு இல்லை. விருப்பமோ இல்லையோ, வீக்கமோ வியர்வையோ, வயதாக வயதாக இவளுக்கு மிக அதிக வேலை. கட்டிய கணவனும் முன்னம் போல இப்போது இல்லை. கசிந்துக் கசிந்து இவள் மேல் காரி உமிழ்வதே அவன் வேலை.
இப்படியே பள்ளியில் பன்னிரண்டு ஆண்டுகள் ஆகின்றன; எப்படியோ இவளுக்கு பல கோடிப் பிரசவங்கள் போகின்றன. சிரமம் சிந்தி இவள் எழுதிய சிலநூறு சிறுவர்கள் சிவப்புக் கம்பள வரவேற்பைப் பெறுகின்றனர். அவர்களைப் பெற்றெடுத்ததால் இந்தப் பெண்ணிற்கு பலர் பதக்கம் தருகின்றனர். ஆனால், பூரிப்பும் சிரிப்பும் எப்போதோ இவளை விட்டு விலகிவிட்டது. ஏனென்றால், பாடுபட்டும் பாராட்டும் இப்போது இவளுக்குப் பழகிவிட்டது. போதாக்குறைக்கு இவ்வருடம் மகிணனோடு மணமுறிவும் வேறு ஆகிவிட்டது.
‘இனி என்ன?’ என்றிவள் எண்ணுகையில் பந்துமுனைக் காரனின் பந்தம் கிடைக்கிறது. ‘நீ மிக இளமையானவன், நான் அருகப் பழமையானவள்’ என்று இவள் சொல்லுகையில் ‘பரவாயில்லை’ என்கிறான் அவன். இறுதியாக இருவருக்கும் திருமணம் நடக்கிறது. தமிழ்க் குழந்தைகள் மட்டுமே பெறக் கைதேர்ந்த இந்தத் தாய், தற்போது ஆங்கிலப் பிள்ளைகள் பெறும்படி அனைவராலும் நிர்ப்பந்திக்கப்படுகிறாள். தலைப்பிரசவம் முதல் தமிழெழுதி சுகப்பிரசவம் கொண்டவள் தான். ஆனால், அன்றிலிருந்து ஆங்கிலம் பெறும்படி அவளுக்கு அடிக்கடி அறுவை சிகிச்சை தான். பெற்ற குழந்தைகளில் பாதி உயிரிழக்க, மீதி ஊனமாயிருக்க, உற்றான் காணும் முன்னே அவர்களைக் கிழித்துத் தின்கிறாள் உடனே. அவமானம் தாளாமல் இவள் ஆங்கிலம் பெற்ற ஆட்கள் தேடிச் செல்கிறாள், அவரிடம் கற்ற அனுபவத்தால் அழகுக் குழந்தைகள் பெற்று வெல்கிறாள். உள்ளார்ந்த போராட்டத்தில் உடனிருந்த பந்துமுனைப் பதியையும் இழக்கிறாள்.
இடர்மேல் இடர் வந்தும், இணையம் இணைந்து இருவகைக் குழந்தைகளையும் எழிலோடு எழுதுகிறாள். இன்று போகலாம், இந்த இணையமும் ஒருநாள் இல்லாது ஆகலாம். ஆங்கிலம் கூட இப்போது சுகப்பிரசவம் ஆகியிருக்கலாம். ஆனால், தமிழ் தான் எப்போதும் இவளுக்கு சுகமானப் பிரசவம்.
குறிப்பு:
இக்கட்டுரையில் வரும் ‘இவள்‘ என்பது நானில்லை, அது என் வலக்கை.
இனியும் ஏதும் சந்தேகம் இருப்பின், தாராளமாக தங்கள் கருத்துக்களைக் கீழே பதிவிடலாம்.