வெகு சில தினங்களுக்கு முன்னம் இவ்வலைப்பூவில் நான் ‘கலங்கரை விளக்கம்’ என்றொரு கட்டுரை எழுதி வெளியிட்டிருந்தேன். அதில் ‘மாசங்கம்’ என்ற பதத்தைப் பிரயோகப்படுத்தியிருப்பேன். ‘மாசங்கம்’ என்ற கிளவிக்கு ‘மாதவிடாய்’ என்று பொருள். நீண்டநேர தேடலுக்குப் பிறகு ‘கூகுள்’ எனக்களித்த கொடை அது. அப்படித் தேனி போல் தேடுகையில் இச்சொல்லிற்கு இணையான இன்னொரு சொல் தனை நான் காண நேர்ந்தது. ‘தூமை’ என்பது தான் அது.
‘அட, என்ன இது? ‘கூகுளு’க்கு இன்று என்ன ஆனது?’ என்று நான் முகம் சுழித்து, முனகிக் கொண்டிருந்த வேளை ‘தூமை’ என்பதற்கு மற்றொரு மாற்றுப் பொருளும் கூட உண்டென்று கண்டுகொண்டேன் அன்று. ஆமாம். ‘தூமை’ என்பதற்கு ‘தூய்மை’ என்ற அர்த்தமும் உள்ளதாம். உணர்ச்சிகட்கு உருவம் மட்டும் இருந்தால் நான் பட்ட ஆச்சரியத்தை எல்லாம் வானம் மட்டும் அடுக்கி வைக்கலாகும். இருந்தும், என்செய்வது? ‘இதனை என்னால் எழுத இயலாது’ என்றெண்ணி உணர்ச்சிகளை எல்லாம் அடக்கி வைத்துவிட்டேன்.
நாட்கள் நகர ஆரம்பித்தன. என் நாணமும் எனை விட்டு அகல ஆரம்பித்தது. ‘ஆஹா! ‘தூமை’ இவ்வளவு அழகானதொரு பதமா? அது வசைச்சொல்லாய் மாறியது எவ்விதமோ? எந்தன் பாட்டி கூட அடிக்கடி ‘ஏ, தூமியக் குடிக்கி!’ என்பாரே!’ என்றவாறு எண்ணலானேன். மனசாட்சி தான் ஓர் ராட்சசி ஆயிற்றே! ஐயோ! எழுதாமல் போனால் அதுவும் என்னை விடுமோ? நகரத்தின் நடைபாதையில் கல்லிட்டவரைக் காட்டிலும் நடக்கையில் அக்கல்லினை நகர்த்தாதவர் புரிவது தான் பெருங்குற்றம் என நாட்படப் புரிந்து கொண்டேன். அதனால் தான் இதனை எழுதலானேன்.
சரி. தூய்மையைக் குறிக்கும் இந்தச் சொல்லானது ‘தூமியக் குடிக்கி’யாய் எங்ஙனம் ஆனது? நிஜமாகவே இந்தப் பதத்தால் ஆண்கள் நிந்திக்கப்படுகின்றனரா? மாதவிடாய் என்பது கழிவு நீக்கம் என்று வெகு சிலரால் எண்ணப்படுகிறது. இல்லை. இது எண்ணப் பிழை. மாறாக, மாதரின் உதிரப்போக்கு தனை உடலில் இயல்பாக நிகழும் ஒரு வெளியேற்றம் எனக் கொள்ள வேண்டும். அப்படியே தான் அறிவியலும் சொல்கிறது மீண்டும் மீண்டும். நன்றாக கவனியுங்கள்! நீக்கம் என்பது வேறு; வெளியேற்றம் என்பது முற்றிலும் வேறு.
கருவானது உருவாகாத தருணங்களில் கருப்பை மடிப்புகளுக்கு மதிப்பில்லை. ஒரிடத்தில் நம் தேவையது குறைந்தால் நாம் வேறென்ன செய்வோம்? அந்த இடத்தை விட்டு வெளியேறி விடுவோம். இதையே தான் இம்மடிப்புகள் செய்கின்றன. அவை உயர்ந்த சுயமரியாதையோடு உரிந்து, அவ்விடத்தை விட்டு உதிர்ந்து செல்கின்றன. விருப்பமில்லா ஒரு ஆசிரியரின் வகுப்பினைப் புறக்கணிக்கும் மாணவரைப் போல் இம்மடிப்புகள் தம்முடன் இருக்கும் இழையங்களையும் மற்றும் குருதியையும் கூடவே கூட்டிக்கொண்டு யோனியின் ஊடாக வெளியேறுகின்றன. இப்போது புரிந்திருக்கும். மாதவிடாய் மாறுபட்டது, ஆனால் மாசற்றது எனத் தெரிந்திருக்கும். குழந்தை கிடக்கும் கருப்பையில் குப்பை இருப்பதில்லை. ஆங்கெனில், அங்கிருந்து வரும் குருதியில் மட்டும் குற்றம் இருக்கலாகுமா? கூறுங்கள்!
‘ஆனால், யோனியினூடாக வருகிறதே!’ என்று நீங்கள் என்னைக் கேட்கலாம். தலை கால்கள் போல மார்பகங்களும் புணர்புழையும் கூட நம்முடலில் உள்ள பாகங்கள் தான். அதை மறந்துவிட வேண்டாம். மற்ற எல்லா அங்கங்கள் எப்படியோ அப்படியே தான் நம் அல்குலும். பிறகெப்படி மாதவிடாய் என்ற சொல் இழிச்சொல்லாகும்? எனில், இதே பொருள் தரும் ‘தூமை’ என்கிற எழில்மிகு சொல் எப்படி இழிச்சொல் ஆகலாகும்? மேலும், தூமைக்கு ‘தூய்மை’ எனும் பொருள் வேறு உள்ளதே!
ஆனால், ஒரு ஆணை நோக்கி ‘ஏ, தூமியக் குடிக்கி’ என்றவாறு எவராலும் எறியப்படும் போது இது அவச்சொல்லாகிறது. சக மனிதர்களை அவமதிக்க உபயோகிக்கப்படாத வரை எச்சொல்லும் நற்சொல்லே. ஆமாம், நறுமொழிக்கும் கூட நாகரிகம் அவசியம். நீராடாத ஒருவரின் துவைத்த சட்டையும் துர்நாற்றம் தான் வீசிடும். ஆக, ‘தூமை’ என்ற தூய சொல்லை பழிச்சொல் என்று சொல்வது நியாயமில்லை. மாறாக, அது பயன்படுத்தப்படும் விதத்தில் மாற்றத்தைக் கொணர முயல வேண்டும். குற்றம் இழைக்கா எவரும் கூண்டில் இருக்கலாகா எனச் சட்டம் எச்சரிக்கிறது. நாம் இனியும் இனிய இச்சொல்லை சிறை வைத்தால் என்னாவது?
Note:
I have written this blog post, knowing all the outrages I’m about to receive here. Anyway, thanks for reading this. Let us unlearn and relearn together on this menstrual hygiene day!