இன்று கண் சொட்டு மருந்து வாங்கச் சென்றேன். நான் கேட்டது எந்த மருந்துக்கடையிலும் இல்லாததால் சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருந்த ஒரு ‘அப்பல்லோ ஃபார்மெசி’க்குக் கால்நடையாகவே சென்றேன். செல்லும் வழியில் சாலையின் பள்ளம் சரியாகத் தெரியாமல் விழுந்துவிட்டேன். மிக மிக வலித்ததெனக்கு; தாளவில்லை. ஆனால், நான் அழவில்லை. அட, எனக்குத் தான் பார்வை குறைபாடு! சாலையில் இருக்கும் பள்ளங்கள் இரவில் சரியாகத் தெரியாது. அச்சாலைக்குமா பார்வை குறைபாடு? நான் வருவதைச் சற்று பார்த்திருக்கக் கூடாது! தள்ளாடிய வண்ணம் நடந்து, எப்படியோ அம்மருந்துக்கடையை எட்டிவிட்டேன். அங்கு மருந்துப் புட்டியை வாங்கிக்கொண்டு, “இங்கு சிறிது நேரம் நான் அமர்ந்துவிட்டுச் செல்லலாமா? ஏனென்றால், இம்மருந்தைக் கண்களில் ஊற்றாது சென்றால் எனக்கு ஏதாவது விபரிதம் நேர்ந்துவிடும்” என்றேன். “தாராளமாக!” என்றனர் கடையிலிருந்தோர். அங்கு ஐந்து நிமிடங்கள் அமர்ந்து, எனது கண்களில் மருந்திட்டுவிட்டுத் திரும்புகையில் ‘போய் வருகிறேன்’ என்று கூறும் விதத்தில் கையசைத்தேன். அங்கிருந்தோரில் ஒருவர் “பாத்துப் போங்க!” என்றார். புண்பட்டிருந்த நான் புன்முறுவல் செய்தேன். உலகில் இனிமேல் நான் பெறப்போகும் அத்தனைச் செல்வங்களின் மதிப்பும் ஐந்து நிமிடங்கள் மட்டுமே நான் அறிந்த அந்த நபரின் இந்த அன்பான இரண்டு வார்த்தைகளுக்கு ஈடாகா! வரும் வழியில் சாலையில் இருந்த இன்னொரு பள்ளத்தில் மறுபடியும் விழுந்து விட்டேன். இம்முறை அவ்வளவு வலிக்கவில்லை எனக்கு. ஆனாலும் அங்கேயே கதறி அழுதேன் – அவர் சொன்ன அந்த இரண்டு வார்த்தைகளை நான் பின்பற்றாததை எண்ணி! ஒரு ஐந்து நிமிடங்கள் அழுதிருப்பேன் என்று நினைக்கிறேன். பிறகு, என் அலைபேசியின் விளக்கை எரிய விட்டேன். அடடே, அன்பு பிரகாசித்து எவ்வளவு அழகாக எனக்கு வழிகாட்டியது தெரியுமா!
